கல்முனை பிரதான வீதியில் இ.போ.ச பேருந்து வீதியை விட்டு விலகி விபத்து

-அம்பாறை நிருபர்-
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி  விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து பயணிகளுடன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு  அம்பாறை நோக்கிச் செல்லும் போது நேர்  எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை மீறி பேருந்துடன் மோத முற்பட்ட போது  விபத்தினை  தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி பேருந்தை நிறுத்த முற்பட்ட வேளை அருகில் இருந்த நீர் வாய்க்காலுக்குள்  பேருந்து விலகி சரிந்து   விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் 1990 சுவ செரிய  அம்புலன்ஸ் ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விபத்து இடம்பெற்ற அம்பாறை – வங்களாவடி பிரதான வீதிக்கு  வருகை தந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விபத்துக்குள்ளான பஸ் வண்டியை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றது.
அத்துடன் இலங்கை  போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தில் 40க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்துள்ளதுடன்  பேருந்து விபத்திற்குள்ளான போது மாற்று வாகனங்களில் அவர்கள் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடத்திற்கு அப்பகுதி மக்களின்  ஒத்துழைப்புடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்