கல்முனை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவி வழங்க கோரிக்கை
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, கல்முனை, ஆலையடிவேம்பு, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுகள் உட்பட பெரும்பாலான பிரதேசங்கள் கடுமையாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவில் 20 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் உள்ள கிராமங்களையும் கல்முனை நகரத்தையும் இணைக்கும் கிட்டங்கி பாலத்தின் மேல் 5 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இதனால் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அன்னமலை-01, அன்னமலை -02, நாவிதன்வெளி-01, சவளக்கடை, சாளம்பைக்கேணி-01, சாளம்பைக்கேணி-02, சொறிக்கல்முனை-01, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள கிராமங்களிலுள்ள வீடுகளில் வெள்ளநீர் மூன்று அடிக்கும் மேல் உள்ளமையினால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாகவோ அல்லது அவர்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துவது தொடர்பில் அரச அதிகாரிகள் இதுவரை எதுவித அக்கறையும் இன்றி உள்ளதாக நாவிதன்வெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தி.யோகநாயகன் (ஸ்தாபகர் மற்றும் செயலாளர் நாயகம ஐக்கிய மக்கள் முன்னணி) தெரிவித்தார்.
மேலும், இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் தினக்கூலிகளாக உள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அன்றாட வேலைகளை இழந்து, வாழ்வாதாரம் இல்லாமல் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
எனவே மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கு பால் மா மற்றும் பெண்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் முன்னணி சார்பில் ஜனாதிபதி அவர்களிடம் அவரச கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக யோகநாயகன் தெரிவித்துள்ளார்.