Sri Lanka Tamil News Site

கல்முனயில் துப்பரவு செய்யப்படாத வடிகான்கள்-பொதுமக்கள் விசனம்

- Advertisement -

-கல்முனை நிருபர்-

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள துப்பரவு செய்யப்படாத வடிகான்களில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கல்முனை பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக காலநிலை மாற்றம் காரணமாக மழையுடன் கூடிய கால நிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் பிராந்தியத்தில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் இருப்பதாகவும், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புரங்களை சுத்தமாக வைத்திருக்குமாறும் பிரதேச பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மக்களை அறிவுறுத்திவருகின்றனர்.

- Advertisement -

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள வடிகான்களில் பிளாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் அடைத்துக்கிடப்பதினால் கழிவு நீர் வழிந்தோட முடியாது தேங்கி நிற்கின்றது. இதன் காரணமாக டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், குப்பைகளினால் துர்நாற்றமும் வீசிவருகின்றது இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு ஆகிய கிராமங்களிலுள்ள வடிகான்களுக்குள் பெருமளவிலான கழிவுகள் அடைத்துக்கிடப்பதனை காணக்கூடியதாகவுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை பிரதான மற்றும் உள்ளுர் வீதிகளிலுள்ள வடிகான்களை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை பொதுமக்களும் தங்களது சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கு பொறுப்புணர்சியோடு நடந்து கொள்ளவேண்டும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -