பிரபல சைவ உணவகத்தில் வாங்கிய வடையில் கரப்பான் பூச்சி இருந்ததையடுத்து , நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக குறித்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாங்கிய வடையில் கரப்பான்பூச்சி இருந்த சம்பவத்தையடுத்து , இந்த விடயம் குறித்து யாழ் பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது .
இதனைத்தொடர்ந்து நேற்றைய தினமும் மாநகர சுகாதார வைத்திய அதிகாரியுடன் பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த கடையினை பரிசோதனை மேற்கொண்டதையடுத்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
- Advertisement -
இதன் போது பல சுகாதார குறைபாடுகள் இனங்காணப்பட்டது. அத்துடன் குறித்த கடையிற்கு வடை தயாரித்து வழங்கும் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள சமையற்கூடமும் பரிசோதனை செய்யப்பட்டது. குறித்த சமையற்கூடமும் சுகாதார சீர் கேட்டுடன் இயங்குவது பொது சுகாதார பரிசோதகர்களால் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து இன்றைய தினம் யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ். நகர பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனினால் கடை உரிமையாளரிற்கு எதிராகவும், சமையற்கூட உரிமையாளரிற்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இரு வழக்குகளையும் விசாரித்த நீதவான் குறித்த கடையினையும், சமையற்கூடத்தினையும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக உடன் சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டதுடன், இரு சந்தேக நபர்களையும் தலா ஒரு இலட்சம் ஆட் பிணையில் செல்ல அனுமதித்தார்.
வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதிக்கு நீதிமன்றால் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த கடையும், சமையற்கூடமும் சீல் வைத்து மூடப்பட்டது.

- Advertisement -