
“கப்பம் பெறுவதற்காகவே எனது மகளை கடத்தியுள்ளனர்” – தந்தை குற்றச்சாட்டு!
தம்மிடம் இருந்து கப்பம் பெறுவதற்காகவே தமது மகள் கடத்தப்பட்டதாக கெலிஓயா – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும் குறித்த குற்றத்தை மறைப்பதற்காகவே, சந்தேக நபர் தமது மகளுடன் காதல் உறவு கொண்டிருந்ததாக கூறுகிறார் எனவும் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
கெலிஓயா – தவுலகல – ஹபுகஹயடதென்ன பகுதியில் வேனில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த 19 வயதான பாடசாலை மாணவியை கடந்த சனிக்கிழமை கடத்திச் சென்றிருந்தார்.
பின்னர் குறித்த மாணவி அம்பாறை பகுதியில் வைத்து நேற்று திங்கட்கிழமை மீட்கப்பட்டதுடன் அவரை கடத்திய சென்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தம்மிடம் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தைப் பெற்றுள்ளதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த பணத்தைத் திருப்பித் தராததால் தாம் மாணவியைக் கடத்தியதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.
தாமும் கடத்தப்பட்ட மாணவியும், காதல் உறவு கொண்டிருந்ததாகவும், தாம் வெளிநாட்டிலிருந்த போது மாணவியின் தந்தைக்கு 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை வழங்கியுள்ளதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த சந்தேக நபர் தமது மூத்த சகோதரியின் மகன் என கடத்தப்பட்ட மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தம்மிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சந்தேகநபர் தமது மகளைக் கடத்தியுள்ளதாகவும் மாணவியின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.