கணவரை பராமரிப்பதற்காக பதவி துறந்த துணை பிரதமர்

புற்றுநோயால் அவதியுறும் கணவரை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக பெல்ஜியம் துணை பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான சோஃபி வில்மஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

2019 முதல் 2020-ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பொறுப்பு வகித்த வில்மஸ், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்டோஃபா ஸ்டோனை 2009-ஆம் ஆண்டு மணந்தார். தற்போது ஸ்டோனுக்கு மூளைப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பதவியை இராஜினமா செய்வதாக வில்மஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எனது கணவர் மூளைப் புற்றுநோயால் அவதியுறுகிறார். பொறுப்பு மிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியைத் தொடர்ந்தால்; அவரது அருகிலிருந்து கவனித்துக்கொள்ளவும் தேவைப்படும் நேரத்தில் அவருக்கு ஆறுதல் அளிக்கவும் எனக்கு நேரமிருக்காது. எனவே, எனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சோஃபி வில்மஸ் தெரிவித்துள்ளார்.

அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ள பிரதமர் அலெக்ஸாண்டா் டிக்ரூ, வில்மஸின் முடிவு அவா மீது மிகப் பெரிய மரியாதையை ஏற்படுத்துவதாகப் பாராட்டியுள்ளாh்.