கடன் வழங்குகிறது அமெரிக்கா

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

ஜூலி சங்குக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில்  ஜனாதிபதி அலுவலகத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் திருமதி விக்டோரியா நூலண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பை தூதுவர் பாராட்டினார்.

அண்மைக்காலமாக இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கான காரணங்களை விளக்கிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்தை அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை பாராட்டிய திருமதி ஜூலி சங், இது நீண்டகால அடிப்படையில் இந்நாட்டுக்கு முக்கியமானதொன்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எந்தவித பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தூதுவர் மார்ட்டின் கெலீ , அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் சூசன் வோல்கே  ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.