கடனுக்கு வட்டி செலுத்த மறுத்த பெண்: நிர்வாணமாக்கி வாயில் சிறுநீர் கழித்த கும்பல்

இந்தியாவின் பீகார் மாகாணத்தில் இந்திய ருபா 1500 கடன்பெற்ற பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதற்கான கூடுதல் வட்டியை செலுத்துவதற்கு மறுத்ததால் அவரை நிர்வாணமாக்கி அவரது வாயில் கடன் கொடுத்தவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர்.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மோசிம்பூர் என்ற கிராமத்தில் பிரமோத் சிங்கிடம் ஒருவர் ரூ. 1500 கடன் பெற்றுள்ளார். அவரும் அவரது மனைவியும் தாங்கள் வாங்கிய கடனை ஒரு குறிப்பிட்ட காலத்தில் கட்டி முடித்துள்ளனர். இருப்பினும், பிரமோத் சிங் கூடுதல் வட்டி வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு தம்பதியினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிரமோத் சிங், அவரது மகன் அன்ஷு மற்றும் அவரது நண்பர்கள் நேற்று முன் தினம் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை தங்களுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார்கள். இதற்கு அவர் மறுத்ததால் அவரை கும்பலாக வந்தவர்கள் கம்புகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் அவரை தூக்கிச் சென்று ஓரிடத்தில் வைத்து நிர்வாணப்படுத்தியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து பிரமோத் சிங் அந்த பெண்ணின் வாயில் தன் மகனை சிறுநீர் கழிக்கச் சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் சிறுநீர் கழிக்க, மற்றவர்களும் இதேபோன்று செய்துள்ளார்கள்.

இந்த கும்பலிடம் இருந்து ஒருவழியாக தப்பித்த அந்தப் பெண், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நிர்வாண நிலையிலும், தெருக்களில் ஓட்டம் பிடித்துள்ளார்.

இதைத் பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை காப்பாற்றியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தின்போது அந்த பெண்ணுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.