ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் பல மாதங்களாக முடக்கம்
– ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு சேவைகள் கடந்த பல மாதங்களாக முற்றாக முடங்கியுள்ளதாகவும், இது குறித்து பிரதமரும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
இது தொடர்பில் சுபைர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் உள்ள சகல பிரதேசங்களிலும் உள்ள பதிவாளர் பிரிவுகளில் பிறப்பு இறப்பு மற்றும் விவாக விவாகரத்துச் சான்றிதழ்களை விரைவாக, ஒன்லைன் ஊடாக வழங்கும் முறைமை ஏற்படுத்தப்பட்டு அந்த சேவைகள் சிறந்த முறையில் இடம்பெற்று வருகின்றன.
இருந்த போதிலும் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சுமார் ஐந்து மாத காலமாக Local Government Wifi (LGN Wifi) ஒன்லைன் வைபை செயலிழந்துள்ளதனால் பதிவாளர் பிரிவு சேவைகள் முற்றாக முடங்கியுள்ளன.
இதனால் பிரதேச மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்பு, இறப்பு, விவாக, விவாகரத்து சான்றுதழ்களை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதுடன் அங்கு சேவையினை பெறுவதற்காக செல்லும் மக்கள் தினமும் ஏமாற்றத்துடனே திரும்பிச் செல்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டு மக்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வரும் நிலையில் வேலையற்ற இளைஞர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றனர்.
எனினும், இவ்வேளையில் தங்களுக்குத் தேவையான கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக பிறப்பு அத்தாட்சி பத்திரங்கள் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் ஏறாவூர் நகர பிரதேச மக்கள் சுமார் 15 கிலோமீற்றர் தூரம் மட்டக்களப்பு கச்சேரிக்குச் சென்று தங்களது பதிவுப் பிரதிகளை எடுக்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது வீண் அலைச்சல். நேர விரயம், பணச் செலவு, அரச செவைகளைப் பெற்றுக் கொள்வதில் அதிருப்தி ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
இந்த விடயமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இதுவரையில் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராகவும் உள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன். ஏறாவூர் பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேச செயலகத்தில் வழமைபோன்று பதிவாளர் பிரிவு இயங்க வேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும்” என்றார்.