எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர்

குடும்ப தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீ குளிக்க முயன்ற குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் மதுபோதையில், கையில் பெற்றோல் போத்தல் ஒன்றுடன் வந்து , தனக்கும் மனைவிக்கும் இடையில் முரண்பாடு என்றும் அதனால் தான் மனமுடைந்துள்ளதாக கூறி , தான் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை தீயிட்டு கொளுத்தி , தானும் உயிர் மாய்க்க போறேன் என்றுள்ளார்.

அவரை எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் , அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த முயன்ற போது , அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு அட்டகாசம் புரிந்துள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.