எதிர்கால வெள்ள இடர் தணிப்பு நடவடிக்கைகளை இப்போதே திட்டமிடுங்கள் : வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்-

யாழ் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை முன்வைத்தார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் இடர்நிலைமை மற்றும் எதிர்கால இடர்தணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாதுகாப்பு அமைச்சின் செயலர் சம்பந் துயகொத்தாவ, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

தற்போதைய இடர்நிலைமைகள் தொடர்பில் பிரதேச செயலர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. தமது பிரதேசத்தில் அதிகூடிய பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டிய பிரதேச செயலர்கள் எதிர்காலத்தில் அங்கு மேற்கொள்ளவேண்டிய வெள்ளத் தணிப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக இடர் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கு மாத்திரமே சமைத்த உணவு உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்கக் கூடியதாக இருப்பதாகவும் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்களுக்கும் அவ்வாறான உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பல இடங்களில் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு மரக்கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்பு போதியளவு தேவையாக இருப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் இங்கு குறிப்பிட்டார். மேலும் தீவுப் பகுதிகளுக்கான மின்சாரத்துக்குரிய எரிபொருளை விரைந்து வழங்குவதற்கு கடற்படையினரின் ஒத்துழைப்பை ஆளுநர் கோரினார். கடற்படையினர் அதற்கு சாதகமான பதிலை வழங்கினர்.

இங்கு கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநராக நா.வேதநாயகன் நியமிக்கப்பட்ட பின்னர் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார் எனவும் அவை வெளியில் தெரியவில்லை எனக் குறிப்பிட்ட அவர் அதனைப் பட்டியலிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்தக் கடினமான நேரத்தில் அனைத்து அதிகாரிகளும், முப்படையினரும், பொலிஸாரும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். அதற்கு முதலில் நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட அவர் எதிர்காலத்திலும் இவ்வாறு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக வெள்ள வாய்க்கால்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடங்களை உடனடியாக இடித்தகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரிய ஆளுநர், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன மக்கள் வீடுகள் அமைக்கும்போது பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைவாக உரிய இடைவெளிகளில் வீடுகளை அமைக்கின்றார்களா என்பதைக் கண்காணிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், இடர்நிலைமையின் போது முன்னெடுத்த கண்காணிப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கும் ஆளுநர், நன்றிகளைத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோரும், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் கே.சிறிமோகன், யாழ். மாவட்ட இடர்முகாமைத்து உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ், பிரதேச செயலர்கள், முப்படையினர், திணைக்களத் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்றனர்.