எங்களுக்கு எப்படியாவது உதவுங்கள்: நஸீர் அஹமட்டிடம் கிராமப் பெண்கள் வேண்டுகோள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

எந்தவொரு அரசியல்வாதிகளும் எட்டிப் பார்க்காத பூநொச்சிமுனைக் கிராமத்திற்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர் அஹமட் வருகை தந்து மக்களின் குறை நிறைகளைக் கேட்பது தங்களுக்கு மிகுந்த ஆறுதலளிப்பதாக அந்தக் கிராமத்தின் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எம்.எப்.எஸ். பத்திலா தெரிவித்தார்.

பூநொச்சிமுனைக் கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்த ஆளுநரிடம் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர்.

அங்கு கிராம மக்கள் ஆளுநரிடம் மேலும் தெரிவித்ததாவது, பூநொச்சிமுனைக் கிராமத்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எந்தவொரு அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ முன்னுரிமை அளித்து தீர்வு காண முயற்சிப்பதில்லை.

அதனால்தான் இன்றளவும் கண்டு கொள்ளப்படாத கிராமமாக பூநொச்சிமுனைக் கிராமம் பின்தங்கிய நிலையிலுள்ளது. இது கரையோர சமுதாய மக்கள் வாழும் கிராமமாகும். எனவே, வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் மூலம் எல்லாக் காலங்களிலும் வருமானம் கிடைப்பதில்லை. வருடத்தில் சுமார் ஆறு மாதங்கள் வருமானமில்லாததால் கிராம மக்கள் வறுமையிலேயே வாட வேண்டியுள்ளது.

அதனால், மீன் பிடித் தொழில் செய்ய முடியாத காலங்களில் பெண்கள் குடிசைக் கைத்தொழிலாக வருமானம் ஈட்டிக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏற்கெனவே தங்களது முயற்சியால் இந்தக் கிராமத்திற்குச் செய்த அபிவிருத்திகள்தான் இன்றளவும் காணப்படுகிறது. இனிமேலும் தாங்கள் பூநொச்சிமுனைக் கிராமத்திற்கு முன்னுரிமை அளித்து உதவ வேண்டும், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திலுள்ள சுமார் 150 அங்கத்தவர்களுக்கு சுய தொழில் முயற்சிகளுக்கான ஏற்ற ஒழுங்குகளைச் செய்து தர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

மேலும், இந்தக் கிராமத்தில் எந்தவிதமான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. மாரி மழை காலத்தில் மாணவர்கள் சேறும் சகதியுமான கிறவல் வீதியால் பாடசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும்” என்றனர்.

மாதர் சங்கத்தினூடாக கிராம மக்களின் வேண்டுகோள்களுக்குச் செவிமடுத்த வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், மக்களின் அத்தியாவசியமான பிரச்சினைகளை ஸ்தலத்தில் வைத்து அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு எதிர்காலத்திலும் கிராமிய அபிவிருத்தித்திட்டங்களுக்கும் வாழ்வாதார முயற்சிகளுக்கும் உதவுப்போவதாக உறுதியளித்தார்.

நிகழ்வில் கிராம முக்கியஸ்தர்களும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பெரும் எண்ணிக்கையிலான பெண்களும் கலந்து கொண்டனர்.