உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் : இறுதியாக தேடப்பட்டு வந்த சடலமும் மீட்பு!

அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில், உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போனவர்களை, தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம் பெற்று வந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை இறுதியாக ஒரு சடலம மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி, காணாமல் போகியிருந்த நிலையில் அன்றையதினம் மாலை மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது, 5 மாணவர்கள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து, ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்த நிலையில், இதுவரை மொத்தமாக 08 சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்கள் 6 பேரின் சடலங்களும், உழவு இயந்திர சாரதியின் சடலமும், இன்னும் ஒரு இளைஞரின் சடலமுமாக மொத்தம் 08 சடலங்கள் மீட்கப்பட்டது.

திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் முடிக்கப்பட்டு குடும்பத்தினரிடம் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகிறது.