உழவு இயந்திரம் விபத்து : கைது செய்யப்பட்ட அதிபர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை,  டிசம்பர்  2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 பேரை 1 இலட்சம் ரூபா பிணையில் செல்லுமாறும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில்  விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், நிந்தவூர் மத்ரசா அதிபர்  ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் நேற்று வியாழக்கிழமை  கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களை   சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர்  சம்மாந்துறை   நீதிமன்ற பதில் எம்.ரி சபீர் அகமட்  முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது, மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் ஏனைய 2 உதவியாளர்களும் தலா 1 இலட்சம் ரூபா வீதம் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை  நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி  மாணவர்கள் பாடசாலை முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாது நின்ற நிலையில், குறித்த மாணவர்களை பாடசாலை நிர்வாகம் உழவு இயந்திரத்தில் ஏற்றி அனுப்பியிருந்தனர்.

மேலும், மாணவர்கள் பயணம் செய்த குறித்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 மாணவர்கள் உயிர் பிழைத்த நிலையில், மேலும் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போனார்கள்

இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர உழவு இயந்திர சாரதி மற்றும் மற்றுமொருவரின் சடலங்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்