
உலகின் முதல் பெண்கள் குழு விண்வெளி சுற்றுப்பயணம் சென்று திரும்பியது
கடந்த 1963ஆம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன் பின் முதல் முறையாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு தனியாக விண்வெளி பயணம் சென்று திரும்பியுள்ளது.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம, நியூ செப்பர்டு என்ற விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது.
விண்வெளிப் பயணத்தில் புது முயற்சியாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை இந்த நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியது. இந்தக் குழுவில், பாப் பாடகி கேட்டி பெர்ரி, பத்திரிகையாளர் கேல் கிங், வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்படத் தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவை வழிநடத்த ஜெஃப் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸ் உடன் சென்றார்.
மேற்கு டெக்சாசில் உள்ள நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்ட விண்கலம் ஏறத்தாழ 107 கிலோ மீட்டர் பயணித்து புவிவட்ட பாதையை சென்றடைந்தது. பூமியின் வளிமண்டலத்துக்கு மேல் உள்ள கார்மன் எல்லைக் கோடு பகுதியில் சில நிமிடங்களுக்கு ஈர்ப்பு விசையின்மை மற்றும் எடையின்மையை உணர்ந்த பெண்கள் குழு, விண்வெளியில் இருந்தபடி பூமியின் அற்புதமான காட்சிகளை கண்டு களித்தனர்.
11 நிமிடங்கள் கொண்ட விண்வெளி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மகளிர் குழு பத்திரமாக பூமிக்கு திரும்பியது. விண்வெளி சுற்றுப்பயணம் சுவாரஸ்யாமான ஒன்றாக அமைந்ததாக பத்திரிகையாளர் கெயில் கிங் தெரிவித்தார். பூமியில் முத்தமிட்டு பாப் பாடகி கேட்டி பெர்ரி தனது நன்றியை தெரிவித்தார்.
இது வெறும் ஒரு விண்வெளிப் பயணமாக மட்டுமல்லாமல், மக்களின் மனநிலையை மாற்றுவதற்கும், எதிர்கால சந்ததிகளை ஊக்குவிப்பதின் நோக்கங்களை உள்ளடக்கிய பயணம் என்றும் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்