உலகின் மிகப்பெரிய மர்மம் : 10 ஆண்டுகளின் பின் மீண்டும் எம்.எச்.370 விமானத்தை தேடும் பணி!
விமான வரலாற்றில் மிகப் பெரிய மர்மங்களில் ஒன்றான 10 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பயணிகள் விமானத்தைத் தேடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மலேஷிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசியன் விமான சேவைக்கு சொந்தமான எம்.எச்.370 என்ற விமானம் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் பயணித்த வேளை மர்மமான முறையில் காணாமல் போனது.
பயணத்தை ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பு இழந்ததுடன், விமானம் வழமையான பாதையில் இருந்து விலகி சென்றமை பதிவாகி இருந்தது.
கடந்த பல ஆண்டுகளாக காணாமல் போன விமானத்தைத் தேடும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட போதிலும் இதுவரை வெற்றி கிட்டவில்லை.
இந்த நிலையில், விமானத்தினை மீண்டும் தேடும் பணிகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த கடல் ஆய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டீசுடன் 7 கோடி டொலருக்கான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக, மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
புதிய தேடுதல் நடவடிக்கைகள் இந்து சமுத்திரத்தின் தெற்கு பிராந்தியத்தில் அடையாளம் காணப்பட்ட 15 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.