உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட குழு வத்திக்கான் பயணம்

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று வெள்ளிக்கிழமை காலை வத்திக்கான் பயணமாகினர்.

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ்ஸின் அழைப்பின் பேரில் பேராயருடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட 30 பேர் உள்ளிட்ட 60 பேரடங்கிய குழுவினர் வத்திக்கான் புறப்பட்டதாக கொழும்பு பேராயர் இல்ல தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததுடன் 500 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதல்கள் நடைபெற்று கடந்த 21 ஆம் திகதியுடன் 03 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதுடன் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி பல்வேறு போராட்டங்கள் நாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்றன.