இலங்கையின் இலக்கை அமெரிக்கா வரவேற்றது

சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்.ஃஎப்) செல்வதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பான உப செயலாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார்.

கொழும்பில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் ஜனநாயக இடைவெளியை விரிவாக்கம் செய்யவும் இலங்கையை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குறிப்பிட்ட அவர், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மிக நெருக்கடியான நிலையில், தமது நாடு இலங்கையுடன் இருக்கும் என்று குறிப்பிட்டார்.

2030 ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 70 வீத மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலங்கையின் இலக்கை அமெரிக்கா வரவேற்றது.

நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான கடப்பாடுகளில் தொடர்ந்து முன்னேறுமாறு இலங்கையை அமெரிக்கா ஊக்குவித்தது..

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை விடுவித்தல், நீதி சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஈடுபாடு ஆகியவற்றையும் அமெரிக்கா வரவேற்றது.

இலங்கைக்கான தனது விஜயத்தில், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து, அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான அடிப்படை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் குறிப்பிட்டார்.