
இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகள் பறிமுதல்
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அண்மைக்காலமாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, அபின் உள்ளிட்ட போதைப்பொருள்களும் மஞ்சளும் அதிகளவில் கடத்தப்பட்டு வருவதும் பொலிஸார் அவற்றை சுற்றிவளைத்து பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறன.
இந்நிலையில், தூத்துக்குடி வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் க்யூ பிரிவு பொலிஸார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் படி, திரேஸ்புரம் கடற்கரையில் ஒரு படகில் சரக்கு வாகனத்தில் இருந்து முடைகளை ஏற்றிக் கொண்டிருப்பதை கண்டு, அவர்களை சுற்றிவளைக்க முற்பட்டபோது அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
தொடர்ந்து அங்கிருந்த சரக்கு வாகனத்திலும் படகிலும் இருந்த களைநாசினிகள் சுமார் 700 லிட்டர், கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் படகு ஆகியவற்றை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.