காவல்துறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு

மன்னார் நிருபர்-

இலங்கை தமிழர்கள் சுமார் 15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி வந்து இறங்கி தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பால் தனுஷ்கோடி கடற்கரை பகுதி உஷார்படுத்தப்பட்டு மத்திய மாநில உளவுத்துறை மற்றும் பொலிஸார் தனுஷ்கோடி பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

தொலைபேசி அழைப்பு வந்த எண்ணை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு சட்டவிரோதமாக தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை கண்காணிக்கவும் அவர்களை அழைத்து வரும் படகோடிக்களை சுற்றி வளைத்து கைது செய்யவும் மத்திய மாநில உளவுத்துறை இந்திய கடற்படை கடலோர காவல் படை மற்றும் மரைன் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் இராமநாதபுரம் மாவட்ட காவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.

அதில் பேசிய மர்ம நபர் தனுஷ்கோடி கடல் பகுதியில் 15க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வந்திருப்பதாகவும் அவர்களை அழைத்து வந்த படகோடிகள் அரிச்சல்முனை பகுதியில் இருப்பதாகவும் உடனடியாக வந்தால் அவர்களை கைது செய்து இலங்கை தமிழர்களை மீட்டு செல்லாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அதே மர்ம நபர் மரைன் பொலிஸாரையும் தொலைபேசியில் அழைத்து இதே போல் கூறியுள்ளார்.

இதையடுத்து, தனுஷ்கோடி கடற்கரை பகுதி உஷார்படுத்தப்பட்டு  உடனடியாக மத்திய மாநில உளவுத்துறை மரைன் பொலிஸ் மற்றும் தனுஷ்கோடி காவல் நிலைய பொலிஸார் சுமார் 20க்கும் மேற்பட்டோர் ஜீப் வேன் உள்ளிட்ட வாகனங்களில், தனுஷ்கோடி அரிச்சல்முனை தனுஷ்கோடி புதிய பாலம் கோதண்டராமர் கோயில் சேராங்கோட்டை உள்ளிட்ட கடற்கரைப் பகுதியில் இரவு முழுவதும் இலங்கை தமிழர்கள் மற்றும் படகோடிகளை தேடினர்.

ஆனால் அந்த தொலைபேசி அழைப்பில் குறிப்பிட்டவாறு இலங்கை தமிழர்கள் யாரும் அகதிகளாக தனுஷ்கோடி வரவில்லை என உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது தொலைபேசி  அணைத்து வைக்கப்பட்டது.

இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் தொலைபேசியில் அழைத்தது யார் என்பது குறித்து தொலைபேசி  எண்ணை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபரின் தொலைபேசி அழைப்பால் இரவு முழுவதும் தனுஷ்கோடி கடல் பகுதி உஷார்படுத்தப்பட்டு மத்திய மாநில உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் மரைன் தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்