இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணிற்கு அரிதாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு நாள்பட்ட மைலோயிட் லுகேமியா ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், அத்தகைய சூழ்நிலையில் அவருக்குச் சுகப்பிரசவம் நடந்துள்ளதாகவும் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இரத்தவியல் துறையின் உதவி பேராசிரியர் அக்ஷய் லஹோடி கூறினார்.
அந்த பெண் கர்ப்பம் தரித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. எனவே, கர்ப்ப காலத்தில் அவருக்குச் சாதாரண புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபியை பரிந்துரைக்க முடியவில்லை.
வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின் அந்தப் பெண்ணின் உடல்நிலை மற்றும் அவரது வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கச் சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
இதேவேளை “அந்த பெண்ணுக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகக் கூறப்படவில்லை. கர்ப்ப காலத்தில் அவரது மனநலம் முற்றிலும் நன்றாக இருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம்” என மகப்பேறு மருத்துவர் டொக்டர் சுமித்ரா யாதவ் கூறினார்.
இது அப்பெண்ணின் முதல் கர்ப்பம் என்றும் சுகப்பிரசவத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் தாயும் இரட்டை குழந்தைகளும் நலமாக உள்ளதாகவும்தெரிவிக்க்பட்டுள்ளது.