இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி: சந்தேக நபரை விடுவித்த பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்-

இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி செய்த நபரை மக்கள் பிடித்து கொடுத்தும், வவுனியா பொலிசார் அவர்களை விடுவித்துள்ளதாக தெரிவித்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்டவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை பி.ப முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்தியாவுக்கு பௌத்தர்களை யாத்திரையாக அழைத்து செல்வதாக தெரிவித்து, வவுனியா மற்றும் மதவாச்சி ஆகிய பகுதிகளில் 20 இற்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.
நபர் ஒருவரிடம் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வீதம் பணம் மற்றும் அவர்களது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போட்டோ பிரதி உள்ளிட்ட ஆவணங்களைப் பெற்ற நபர் யாத்திரைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மக்களிடம் பணம் பெற்ற பின் மக்களுடன் தொடர்பில்லாது நடமாடியுள்ளார்.
இதனால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பணம் செலுத்தியோர், மதவாச்சி பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் குறித்த நபருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்திருந்தனர். எனினும் சம்மந்தப்பட்டவர் பொலிஸ் நிலையம் செல்லாது தலைமைறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி குறித்த நபர் வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்பாக நிற்பதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரியவந்ததையடுத்து அங்கு சென்ற பாதிக்கப்பட்டோர் குறித்த நபரை பிடித்து வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்கள், குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவில் ஒப்படைத்துள்ளார். எனினும் முறைப்பாடு எடுக்கப்படாது குறித்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டினர்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலத்தில் முறைப்பாடு ஒன்றினையும் இன்று பதிவு செய்ததுடன், வவுனியா பொலிசார் குற்றவாளியை விடுவித்தாக தெரிவித்து பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், தம்மை ஏமாற்றிய நபரை பொலிசார் உடனடியாக கைது செய்து தமது பணத்தையும், கடவுச் சீட்டையும் பெற்றுத் தரவேண்டும்.
 பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நாம் சிறுக சேர்த்த பணத்தை சுற்றுலாவை நம்பி கொடுத்து ஏமாந்துள்ளோம். ஏமாற்றியவரை நாம் பிடித்து கொடுத்தும் பொலிசார் அவரை விடுவித்துள்ளனர். எமக்கு தேவை எமது பணமும் கடவுச் சீட்டுமே. அதனை பொலிசார் பெற்றுத் தர வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி: சந்தேக நபரை விடுவித்த பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதாக கூறி பணமோசடி: சந்தேக நபரை விடுவித்த பொலிசாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்