
இந்தியப் பெண் 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோக்கைனுடன் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 65 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கோக்கைனுடன் இந்தியப் பெண் ஒருவரை காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, கைது செய்தனர்.
இந்தியாவின் மிசோரமைச் சேர்ந்த 29 வயதான சமையல் தொழில் புரியும் இவர், சென்னையிலிருந்து பொலித்தீனில் சுற்றப்பட்டு தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.644 கிலோகிராம் கோக்கைனை எடுத்து வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் இதற்கு முன்பு மூன்று முறை இலங்கைக்கு வருகை தந்திருப்பது தெரியவந்தது. காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த கைது நடந்தது.
மேலதிக விசாரணைகளின் போது , கொழும்பின் கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் போதைப்பொருட்களைப் பெறுவதற்காகக் காத்திருந்த மாலபேயைச் சேர்ந்த 50 வயது தொழிலதிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.