இணையத்தில் பணமோசடி செய்த தம்பதியினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

இணையத்தின் ஊடாக 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதியரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை அடுத்த விசாரணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைப்பாடு கோரப்பட்ட போது ​​குற்றப் புலனாய்வு திணைக்களம் சார்பில் முன்னிலையான அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து குறித்த சந்தேகநபர்கள் இணையத்தளத்தில் பணம் வைப்புகளைப் பெற்று 260 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் , சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படக்கூடும், எனவே பிணை கோரிக்கைகளை நிராகரித்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்ததுடன், பொலிஸாரின் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே குறித்த வழக்கு தொடர்பாக பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை அன்றைய தினம் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார் .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்