இணைந்த கரங்கள் அமைப்பின் ‘ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்’ செயற்திட்டம்

-கல்முனை நிருபர்-

பாடசாலையில் உயர்தர விஞ்ஞான பாடத்திற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையினால் கண்டி பிரதேசத்தில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து பிரத்தியோக வகுப்புக்களை பாடசாலையில் நடாத்துகின்றனர். மேலும் மாணவர்களுக்கு போதிய தளபாட வசதிகள் இல்லாத காரணத்தினால் ஒருவர் அமரும் ஆசனத்தில் இருவர் அமர்ந்து கொண்டும் தரையில் இருந்து கொண்டும் தனது வகுப்பைறையில் கல்வியினை கற்கின்றனர் என இணைந்த கரங்கள் அமைப்பின் அமைப்பின் இணைப்பாளர் லோ. கஜரூபன் தெரிவித்தார்.

இணைந்த கரங்கள் அமைப்பினால் க/சரஸ்வதி மத்திய கல்லூரி பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர் கணேசன் லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்தில் உள்ள க/சரஸ்வதி மத்திய கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் பாடசாலைக்கு வருகை தருபவர்களாக காணப்படுவதுடன் இக் கிராமத்தில் உள்ள மக்களின் பிரதான தொழிலான தோட்டத் தொழிலையே நாளாந்தம் நம்பி இந்த மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர். அதனாலயே இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது அவர்களது பயணத்தின் நோக்கத்தையும் மாணவச் செல்வங்களின் வலியையும் உணர்ந்து “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் மகுடம் வாசகத்தினை சுமந்து செல்கின்றது. இதனால் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்து உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்றார்.

மேலும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்க செயலாளர் திருஞானம், பாடசாலையின் பகுதி தலைவர்களான ஏம்.தவமலர், ஆர். ஜெயகாந்தி, பேராதனை தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரியைகள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள்,இணைந்த கரங்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.