ஆழிப்பேரலையின் ஆறாத வடுக்கள் ஏற்பட்டு 20 வருடங்கள்

நாம் வாழுகின்ற பூமியில் 70 சதவீத நிலப்பரப்பு கடலுக்கு அடியில் உள்ளது. பூமி முழுவதையும் நிலம் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள 12 பாறைத் தட்டுகள் தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளன.

இந்தத் தட்டுகள் ஒன்றையொன்று மோதிக் கொண்டாலோ அல்லது இருக்கின்ற இடத்திலிருந்து நகர்ந்தாலோ பூகம்பங்கள் உருவாகின்றன. தட்டுகள் நேருக்கு நேர் ஒன்றையோன்று மோதிக்கொள்ளும் பொழுது ஒன்று கீழ் நோக்கியும் மற்றொன்று மேல் நோக்கியும் தள்ளப்படுகிறது.

இரண்டுமே மோதிக்கொள்ளும் வேகத்தைப் பொறுத்து ஏற்படும் இடைவெளியில் இருந்து வெளி வரும் அழுத்தமும்இ வெப்பமும் மேல் நோக்கி ஆவேசமாக வெளி வருகிறது. இதன் வேகத்தின் அளவைப் பொறுத்தே கடல் மற்றும் நிலப்பரப்பு ஆகியவற்றில் நடுக்கம் ஏற்படுகிறது.

கடலுக்கு அடியில் ஏற்படும் இந்த பூகம்பம் கடலின் மேற்பரப்பிற்கு வரும் பொழுது ராட்சச அலைகளை உண்டாக்குகிறது.

நில அதிர்வுக்கு தக்கவாறு கடல் அலைகளின் வீரியம் இருக்கும். ரிக்டர் அளவுகோளில் ஐந்துக்கு குறைவாக காணப்பட்டால் எந்த பாதிப்பும் இருக்காது. ஐந்து முதல் ஏழு வரை காணப்பட்டால் ஓரளவுக்கு பாதிப்புகள் இருக்கும். 7.5க்கு மேல் காணப்படும் பொழுது சுனாமி அலைகள் தோன்றும்.

ஆழிப்பேரலை சாதாரண நேரங்களில் ஏற்படும் அலைகளைப் போல் அல்லாமல் மிக அதிக உயரமாகவும் மணிக்கு 800 முதல் 1000 கிலோ மீட்டர் வேகத்திலும் இவ்வலைகள் நிலப்பகுதிக்குள் நுழையும்பொழுது நிலநடுக்கம் ஏற்படுத்தும் பாதிப்புகளை விட
மிக மிக அதிகமான அளவு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவிநடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்டது.

சுமத்திரா தீவு பகுதியில் கடலுக்கடியில் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இலங்கை நேரப்படி 06:58:53 மணிக்கு 9.1 – 9.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இந்த ஆழிப்பேரலை இலங்கையின் கிழக்கு கடற்கரையை 8:35 மணிக்கு தாக்கியது.

இதேவேளை தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, இந்தியா, தாய்லாந்து, பங்களாதேஷ், மாலைதீவு, மலேசியா, மியன்மார், மடகஸ்கார், சோமாலியா, கென்யா, ஜெர்மன், தன்சானியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது.

இவ்வாறு பேரழிவுகளை ஏற்படுத்திய ஆழிப்பேரலையின் தாக்கத்தில் இலங்கையில் 31,229 பேர் உயிர் இழந்ததுடன் 130,000 வீடுகள் சேதமடைந்துள்ளது. இவற்றில் 99,000 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மொத்தமாக 1 பில்லியனுக்கு மேலான பொருளாதார இழப்பினை இலங்கை சந்தித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றுள் மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 2,836 எனவும் 630 பேர் வரையில் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வெளி இடங்களில் இருந்து நாவலடி பகுதியில் அமைந்துள்ள
ஆலையம் ஒன்றிற்கு வழிபாட்டிற்காக வந்தவர்கள் என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல் இந்தோனேசியாவில் 122232 பேரும், இந்தியாவில் 10776 பேரும், தாய்லாந்தில் 5395 பேரும், சோமாலியாவில் 150 பேரும்,மாலைதீவில் 82 பேரும், மலேசியாவில் 68 பேரும், மியான்மரில் 59 பேரும் உயிர் இழந்துள்ளனர்.

இது மட்டுமல்லாது கடந்த 100 ஆண்டுகளில் மொத்தம் 58 சுனாமிகள் ஏற்பட்டு 260,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1998 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சுனாமியால் 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்