
ஆபிரிக்காவின் முகமூடி பிரான்ஸில் ஏலம்
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மத்திய ஆபிரிக்காவின் முகமூடி ஒன்று பிரான்ஸில் 4.2 மில்லியன் யூரோவுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இந்த முகமூடியை திரும்பத் தரும்படி கபோன் அரசு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே கடந்த சனிக்கிழமை இந்த ஏலம் இடம்பெற்றது.
மிக அரிதான மரப்பலகையால் செதுக்கப்பட்ட “நிகில்” என்ற இந்த முகமூடி கபோனின் பங் இன மக்கள் தமது சடங்குகளில் பயன்படுத்தி வந்ததாகும்.
தெற்கு பிரான்ஸ் நகரான மொன்டபில்லியல் நகரில் இடம்பெற்ற ஏலத்தில் 300,000 தொடக்கம் 400,000 யூரோவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக விலை போனது.
2006 ஆம் ஆண்டு பாரிஸில் இடம்பெற்ற ஏலம் ஒன்றில் இது போன்ற ஒரு முகமூடி 2.09 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போனமை குறிப்பிடத்தக்கது.