அவர்களின் போராட்டம் வறுமைக்கானது, எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது

-யாழ் நிருபர்-

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பம் வைத்ததன் அர்த்தம் சஜித்திலோ, ரணிலிலோ அல்லது பொன்சேகாவிலோ நம்பிக்கையுள்ளது என்பதல்ல.

இனப்படுகொலையாளிகளான ராஜபக்ஷாக்களைப் பதவியில் தொடர அனுமதிக்க முடியாது என்பதனாலேயே கையொப்பம் வைக்கப்பட்டது, என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர்  க.சுகாஷ்  தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,

அதற்காகத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு உடன்படாத எவரையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டாது.

அரசியல் தீர்வற்ற வெறும் ஆட்சி மாற்றங்களுக்குக் கொடிபிடிக்க வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. அவ்வாறு கொடி பிடிப்பதனால் தமிழினத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதுமில்லை.

அவர்களின் போராட்டம் வறுமைக்கானது. எங்களின் போராட்டம் வாழ்க்கைக்கானது. அரிசி, பருப்பின் விலை குறைந்தால் அவர்களின் போராட்டம் முடியும். இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும்.

போராட விரும்பும் தமிழ் இளைஞர், யுவதிகள் 1500 நாட்களைக் கடந்தும் தெருவில் போராடிக் கொண்டிருக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளோடு கைகோருங்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.