அராலி வீதியில் உள்ள மதகில் பாரிய குழி: கொங்கிரீட் தட்டில் கம்பிகள் இன்மையால் மக்கள் அதிர்ச்சி

-யாழ் நிருபர்-

அராலி பாலத்தில் இருந்து அராலி துறைக்கு செல்லும் வீதியில் உள்ள மதகு சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரித்தான வீதியாக காணப்படுகிறது. மேலும் 789 வழித்தட பேருந்து பயணிக்கும் பிரதான வீதியாக இந்த வீதி காணப்படுகிறது.

இந்த வீதியில் உள்ள மதகில் இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி அகலத்திலும் துவாரம் காணப்படுகின்றது. கொக்கிரீட்டிலான தட்டு உடைந்து, அதற்குள்ளே இருந்த போக் உடைந்து இந்த குழி தோன்றியுள்ளது. இருப்பினும் கொங்கிரீட் தட்டின் உள்ளே கம்பிகள் காணப்படவில்லை என்ற விடயமானது முன்னர் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு பணிகளின் தரமற்ற தன்மையை எடுத்துக்காட்டுவதுடன் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீதியால் அன்றாடம் 789 வழித்தட பயணிகள் சேவை பேருந்து பயணிப்பதுடன், வயோதிபர்கள், பாடசாலை மாணவர்கள், வேலைகளுக்கு செல்வோர் என பல்லாயிரக்கணக்கானோர் இந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.

மேலும் இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்