அரச துறையில் அதிக பணியாளர்களை கொண்ட நாடு இலங்கை!
ஆசிய நாடுகளிலேயே இலங்கையில் தான் அரச துறையில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது, என வெரிட்டே ரிசேர்ச்சின் (Verite Research)பப்ளிக் பினான்ஸ் (publicfinance.lk ) இணையத்தளம் தெரிவித்துள்ளது.
கடந்த தசாப்தத்தில் அரச செலவினத்தில் சராசரியாக 23 வீதம் சம்பளங்களுக்காகச் செலவிடப்பட்டுள்ளது, என குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் ஒரே மாதிரியான பொருளாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளில் மிகக் குறைவான அரச உத்தியோகத்தர்களே பணிபுரிகின்றனர்
ஆனால், இலங்கையில் மட்டுமே அது மிகப்பெரிய அளவிலான வித்தியாசத்தில் காணப்படுகின்றது.
2023ஆம் ஆண்டில் மொத்த தொழிற்படையான 8 மில்லியனில், 1.16 மில்லியன் பேர் (அதாவது 15 வீதமானோர்) மத்திய அரசாங்கம், துணைத் தேசிய அலகுகள் மற்றும் இராணுவம் உட்பட அரச துறையில் பணிபுரிந்துள்ளனர்.
குறிப்பாக, மொத்த அரச உத்தியோகத்தர்களில் மூன்றில் ஒரு பங்கினர், பாதுகாப்பு மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு துறையில் பணியாற்றுகின்றனர்.
ஒப்பீட்டு ரீதியில் பார்க்கையில் இந்தியா 9 வீதமும், வியட்நாம் 8 வீதமும், பங்களாதேஷ் 5 வீதமுமான, உத்தியோகத்தர்களை மட்டுமே அரச துறையில் பயன்படுத்துகின்றன.
2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 940 பில்லியன் ரூபாவை (அதன் மீண்டெழும் பாதீட்டில் 20 வீதத்தையும், அதன் வருமானத்தில் 31 வீதத்தையும்) அரச துறை சம்பளங்களுக்காகச் செலவிட்டுள்ளதாக, குறித்த இணையத்தளம் தனது ஆய்வு அறிக்கையை வெளியிட்டுளளது.