அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே பலமானது: ஜனாதிபதி

அரசியலமைப்பிலும், சட்டங்களிலும் எத்தகைய கட்டளைகள் காணப்பட்டாலும் மக்களின் சக்தியே பலமானது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று வெள்ளிக்கிழமை தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையைச் சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்பு தெளிவாகின்றது.

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை.

அதனை நிறைவேற்றுவதற்கு அரச ஊழியர்களின் ஆதரவு அவசியமாகும்.

அனைவரும் எதிர்பார்க்கும் இந்தப் புதிய மாற்றத்தில், அரச சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது அரச சேவையே வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்குப் பாய்ச்சலை ஏற்படுத்தியதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.