Sri Lanka Tamil News Site

அம்பாறை மாவட்டத்தில் தலைதூக்கியுள்ள மாட்டிறைச்சி அரசியல்

- Advertisement -

-நூருல் ஹுதா உமர்-

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக மூச்சு விடுவதாக இருந்தால் கூட சாதாரண ஒருவருக்கு தினம் 5000 ரூபாய்க்கு மேல் தேவை எனும் நிலை உருவாகியுள்ளது.

அதில் பல்வேறு மாபியாக்களும், மனசாட்சி இல்லாதவர்களின் செயலும் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இப்படியான பெரும் மாபியா கடலிலிருந்து ஒரு துளியை பிரித்தெடுத்தது போல அம்பாறை மாவட்டத்தில் சில நாட்களாக பேசுபொருளாக மாறியிருக்கும் இறைச்சி விலை பிரச்சினையை ஆராய்ந்தால் பல்வேறு இடியப்ப சிக்கல்களையும், அதிகார வர்க்கத்திற்கு வர்த்தகர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளையும் காணக்கூடியதாக உள்ளது.

கல்முனை முதல்வரின் அறிக்கைக்கு கடையை மூடிய இறைச்சி கடைக்காரர்கள்.

சொந்தமான விலங்கறுமனையையோ அல்லது சொந்தமான இறைச்சிக் கடைகளையோ கொண்டிராத கல்முனை மாநகராட்சி இந்த இறைச்சி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

அதன் பகுதியாக கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சியின் அதிகூடிய கட்டுப்பாட்டு விலையாக 1,600 ரூபாவை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் நிர்ணயித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மாநகர சபை தரப்பு நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோ மாட்டிறைச்சி 2,200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய மேற்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022.08.06 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில், இந்த நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் மாநகர மேயரால் மாநகர சபைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடன் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு கிலோகிராம் மாட்டிறைச்சி 1,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அதில் ஆகக் கூடியது 200 கிராம் மாத்திரமே முள் அடங்கியிருத்தல் வேண்டும் எனவும் அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் கல்முனை முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளை, இறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாடுகளை விற்பனை செய்வோர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு கிலோ இறைச்சியை ஆகக்கூடியது 1,300 ரூபாய்க்கு வழங்க வேண்டும் எனவும் மேயரால் உத்தரவிடப்பட்டிருக்கின்றது.

இதனை மீறும் மாட்டு வியாபாரிகள் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இம்மாதம் 05ம் திகதிவரை 2000- 2200 ரூபாய் வரை கல்முனை மாநகர எல்லைக்குள் இறைச்சி விற்கப்பட்டதுடன் 06ம் திகதி முதல் பெரும்பான்மையான இறைச்சி கடைகள் முதல்வரின் அறிவிப்பின் காரணமாக மூடப்பட்டுள்ளது.

கடைகளை மூடியமைக்கு காரணமாக இறைச்சி கடைகளில் மேயரினால் குறிக்கப்பட்டுள்ள விலைக்கு இறைச்சியை விற்க முடியாது என்கின்றனர் இறைச்சி கடைக்காரர்கள்.

இறைச்சி விலை ஏன் அதிகரிக்கின்றது என்ற கேள்விக்கு விடை தேட வேண்டியது இறைச்சிக்கடைக்காரர்களைத் தாண்டி இறைச்சிக்கடைகளைக் குத்தகைக்கு விடுவோரின் கைகளிலும் தங்கியுள்ளது என்பதனை ஒரு கனம் புரிந்துகொள்ள வேண்டும்.

பல லட்ச ரூபாய்களுக்கு கடைகளைக் குத்தகைக்கு விட்டால் நாளுக்கொரு விலையை அவர்களும் அதிகரிப்பதில் நியாயமும் இல்லாமல் இல்லை. அவ்வாறான தொகைக்குக் குத்தகைக்கு விட்டுவிட்டு விலையைப்பற்றிப் பேசுவதில் நியாயமும் இல்லை.

அவ்வாறான பெருந்தொகைக்குக் குத்தகைக்கு பெரும் அவர்கள் அவர்களது வாழ்வாதாரம்இ இலாபம்இ அடுத்த முறை குத்தகைக்குப் பெறுவதற்கான பணத்தினை சேகரித்தல் போன்ற விடயங்களில் கவனஞ்செலுத்துவதால் விலை அதிகரிப்பு ஏற்படுகின்றதே தவிர இங்கு டொலர் தட்டுப்பாட்டிற்காக விலை அதிகரிக்கப்படுவதில்லை.

இந்நிலையில் மாற்றம்பெற வேண்டுமானால் முதலில் குத்தகையை நிர்ணயம் செய்து குறிப்பிட்ட ஒரு சிறு தொகைக்குக் குத்தகைக்குக் கடையை வழங்கி விட்டு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்தால் மக்களும் கடையைக் குத்தகைக்கு எடுத்தவரும் நன்மையடைவார்கள் என்பதில் ஐயமில்லை.

மக்களின் வயிற்றில் அடித்து கட்டிடங்களை கம்பீரமாகக் காட்சிப்படுத்தி என்ன பயன்? மாற்றத்தை எதிர்பார்க்கும் நம்மிடமிருந்து முதலில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நியாயமான கருத்தொன்று பொதுவெளியில் இந்த பிரச்சினைகளின் பின்னர் உலவுகிறது.

இறைச்சி விலை நிர்ணயத்தில் பிராந்தியத்தின் அனைத்து உள்ளூராட்சி சபைகளும் ஒருமித்த ஒரு விலை நிர்ணயத்திற்கு வரவேண்டும். கல்முனையில் ஒரு விலை, அக்கரைப்பற்றில் ஒரு விலை, நிந்தவூரில் ஒரு விலை, அட்டளைச்சேனையில் ஒரு விலையும், சம்மாந்துறையில் ஒரு விலையும் இருக்கக்கூடாது.

இதனால் கடந்த காலங்களில் மாட்டு வியாபாரிகளுக்கும் இறைச்சிக்கடைக்காரர்களுக்கும், உள்ளுராட்சி சபைகளுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையும், தான்தோன்றித்தனமான விலை அதிகரிப்பும் காணப்பட்டது.

எனவே சபைகள் ஒன்றினது இறைச்சி விற்பனையுடன் சம்மந்தபட்ட மாட்டு வியாபாரிகள், கடைகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிராந்தியத்திற்கான ஓர் விலை நிர்ணயம் செய்யுங்கள்.

இது இறைச்சிக்கு மட்டுமல்ல மீன் வியாபாரத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டும். செல்வமீன்-1000   மேல், வெட்டு மீன்-2400  மேல்,  100 ரூபாக்கு வாங்கிய சாலை மீன் 1000, கீரி 1400,  தவிர கடல் மீனுக்குதான் எரிபொருள் தட்டுப்பாடு என்றால் ஆற்று மீனுக்கும் இந்த நிலைதான் என்கின்றனர் நுகர்வோர்.

கோழி இறைச்சிக்கும் இதுதான் நிலைமை.

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்து, அதனை இறுக்கமாக அமுல்படுத்துவதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. 2022.08.06 ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் இதனை அமுல் நடத்துவதற்கு மாட்டிறைச்சி வியாபாரிகள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் குறித்த தினத்திலிருந்து பெரும்பாலான இறைச்சிக் கடைக்காரர்கள் இறைச்சிக் கடைகளை திறக்காமல், வியாபாரத்தை நிறுத்தியுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இந்நிலை தொடரலாம்.

உண்மையில், நிர்ணய விலைக்கு இறைச்சியை விற்காமல், தமது தீர்மானத்தை மீறும் இறைச்சிக் கடைகளை இழுத்து மூடுவதற்கு முதல்வர் தயாராக இருந்தார். அதற்காக 06ஆம் திகதி சனிக்கிழமையன்று காலை வேளையில் பொலிஸ் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் சகிதம் முதல்வர் கள விஜயம் மேற்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் வியாபாரம் நடத்தாமல் கடைகளை அவர்களாகவே மூடியிருந்தமை முதல் வெற்றியாகும் என கல்முனை மாநகர சபை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் கதையை பக்குவமாக எடுத்துரைத்தது.

இவைகளெல்லாம் இப்படி இருக்க இந்த விடயம் தொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமை  கல்முனை முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.ஏ.வாஹிட், மாநகர சபை கணக்காளர் எம்.எம்.ரியாஸ், கால்நடை வைத்திய அதிகாரி வட்டப்பொல உட்பட இறைச்சிக் கடைக்காரர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களை மேற்கொண்டதுடன், 01 கிலோ மாட்டிறைச்சி (200 கிராம் எலும்பு அடங்கலாக) 1700 ரூபாவுக்கும், தனி இறைச்சி 1900 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டது.

ஆனாலும் இன்றுவரை அதிக இறைச்சிக்கடைகளுக்கு பூட்டே போடப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்முனை முதல்வரின் ஆளுமை வெளிப்படையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கல்முனையை ஆளும் தரப்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர். அமீர் ‘நாங்க சும்மா பகடிக்கி சொல்றதையெல்லாம் நீங்க நம்புறானா- நாங்க எவ்வளவோ தீர்மானங்களை எடுத்திரிக்கின்றோம் ஏதாவது நடந்திரிக்கா’ என தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுதொடர்பில் பகிரங்கமாகவே கிண்டல் செய்துள்ளார்.

இறைச்சி வியாபாரத்தில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள்

பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைப்பு வழங்கினால் இறைச்சிக் கடைக்காரர்களை வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என கல்முனை மாநகர சபை நம்புவதாக தெரிவிக்கப்படுவதுடன், 01 கிலோ மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.

- Advertisement -

அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே எலும்பு அடங்கியிருத்தல் வேண்டும், தனி இறைச்சியாயின் 01 கிலோ கிராம்- 1800 ரூபாவுக்கே விற்கப்பட வேண்டும், அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் தராசு பயன்படுத்தப்பட வேண்டும் என மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272 (8) இன் பிரகாரம் மாநகர முதல்வருக்கு உரித்தான அதிகாரத்தின் கீழ் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பொது மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இத்தீர்மானங்களில் எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. இதனை அமுல்படுத்துகின்ற விடயத்தில் மாநகர முதல்வர் மிகவும் உறுதியுடன் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் அதில் தளர்வை கல்முனை முதல்வரே மேற்கொண்டுள்ளார்.

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லையினுள் நிர்ணய விலைகளிலேயே மாட்டிறைச்சி விற்கப்படுவதை அப்பகுதி வியாபாரிகள் அக்கரைப்பற்று மாநகர சபைக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றனர்.

அதேவேளை, அட்டாளைச்சேனையில் இவ்விலையை நடைமுறைப்படுத்த அங்குள்ள மாட்டிறைச்சி வியாபாரிகள் தவறியமையால், அப்பிரதேச சபை சபைத் தவிசாளரினால் அப்பகுதி விலங்கறுமனை இழுத்து மூடப்பட்டிருக்கிறது.

ஆனாலும் துரதிஷ்டவசமாக இழுத்து மூட மாநகர சபைக்கு சொந்தமான விலங்கறுமனையோ மாநகர சபைக்கு சொந்தமான இறைச்சிக்கடைகளோ கல்முனையில் இல்லை என்பதே இங்கு கவலையான விடயமாக உள்ளதுடன் கல்முனை மாநகர இறைச்சிக்கடைக்காரர்கள் தமது எண்ணம் போலவே இதுவரையும் வியாபாரம் செய்து வருகின்றனர்.

தனியார் ஒருவருக்கு சொந்தமான விலங்கறுமனைக்கு எதிராக வழக்கொன்றை பதியுமாறு கல்முனை நீதிமன்றம் ஆணையாளரை பணித்திருந்தும் அதனை கூட நிறைவேற்ற முடியாமல் காலம் இழுத்தடிக்கும் கல்முனை மாநகர சபை நிர்வாகம் இறைச்சி விலையில் உச்சகட்ட இறுக்கம் காட்ட முடியாது இருக்க பல காரண காரியங்கள் இருக்கிறது.

பொய்யும், இயலாமையும் நிறைந்த தீர்மானங்கள்

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், கடந்த 03 ஆம் திகதி மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின்போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆராயப்பட்டு அவற்றுக்குரிய தீர்வுகள் முதல்வரினால் முன்மொழியப்பட்ட நிலையில் அத்தீர்மானங்களை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் பிரிவு 272  இன் கீழ் குறித்த மாட்டிறைச்சிக் கடைகள் உடனடியாக இழுத்து மூடப்படும் எனவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் முதல்வரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான குறித்த கலந்துரையாடலில், அவர்களினால் தெரிவிக்கப்பட்ட செலவீனங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்தபோது, அவை மிகைப்படுத்தப்பட்டவை என தெரிய வந்துள்ளது.

குறிப்பாக மாடு விற்பவர்கள், தங்களுக்கு ஒரு கிலோ கிராம் இறைச்சியை எலும்புடன் சேர்த்து 1700 ரூபாவுக்கே தருகிறார்கள் என இறைச்சிக்கடை வியாபாரிகள் கூறியிருந்தனர்.

அப்போது இவ்விலையைக் குறைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதியளித்ததன் பிரகாரம் வெள்ளிக்கிழமை (05) மாடு வியாபாரிகளை, மாநகர சபைக்கு அழைத்துஇ பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதன்போது, தாம் மாட்டிறைச்சிக் கடைக்காரர்களுக்கு கிலோவொன்று 1500 ரூபாப்படியே விற்பதாகவும் அத்தொகைக்கு மேல் அவர்கள் வாங்க மாட்டார்கள் எனவும் ஒவ்வொரு மாட்டிலும் 04 சந்துகள் மாத்திரமே நிறுக்கப்பட்டு, மாட்டுக்கான தொகை தீர்மானிக்கப்படுவதாகவும் ஈரல், குடல் மற்றும் இதர பகுதிகள் யாவும் இறைச்சிக் கடைக்காரர்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன எனவும் மாடு வியாபாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இவற்றின் மூலம் இறைச்சி வியாபாரிகளுக்கு 10,000 ரூபா முதல் 15,000 ரூபா வரை மேலதிக வருமானம் கிடைக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

ஆக, உண்மைகள் மறைக்கப்பட்டு, செலவீனங்கள் அதிகமாகக் காட்டப்பட்டே மாட்டிறைச்சி வியாபாரத்தில் கொள்ளை இலாபம் அடிக்கப்படுகின்றமை நிரூபிக்கப்பட்டுள்ளதால், இந்த மாபியாவை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் இந்த விடயத்தில் எத்தகைய விமர்சனங்கள், சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து, மக்களுக்கு நியாய விலையில் மாட்டிறைச்சி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு மாநகர முதல்வர் அதீத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த விடயம் சம்மந்தமாக கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளுடனும் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்களுடனும் முதல்வர் பேசியிருப்பதுடன் அவர்களது ஒத்துழைப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆகையினால், தீர்மானிக்கப்பட்ட விலைகளுக்கு இறைச்சி விற்பதற்கு வியாபாரிகள் முன்வராத வரை மாட்டிறைச்சிக் கடைகளை திறப்பதற்கோ வேறு வழிகளில் மாட்டிறைச்சி விற்பதற்கோ அனுமதி வழங்கப்பட மாட்டாது.

இதனால் இன்னும் சில தினங்களுக்கு நுகர்வோருக்கு இறைச்சி கிடைக்காமல் போகலாம். இது விடயத்தில் சகிப்புத்தன்மையுடன் பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் இந்த மாபியாவை முறியடிக்கும் சவாலை ஒன்றிணைந்து வெற்றி கொள்வோம் என்கிறது கல்முனை மாநகர சபை.

அக்கரைப்பற்றில் நடக்கும் இறைச்சி வியாபாரம்

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு, மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான சந்திப்பொன்று அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சகி தலைமையில் மாநகர சபையில் இடம்பெற்றது.

இதில் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த குற்றச்சாட்டை விற்பனையாளர்கள் முற்றாக மறுத்தனர்.

மேலும், ஒரு கிலோ இறைச்சி (இறைச்சி 800பூமுள்ளு 200) 1600 ரூபாய்க்கும், தனி இறைச்சி 1800  ரூபாய்க்கும் தொடர்ந்தும் விற்பனை செய்வதாகவும் உறுதியாக கூறினர்.

இருந்தாலும், ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்க வாய்பிருக்கலாம் என்பதையும், பொருளாதார நெருக்கடி நிலையையும் கருத்தில் கொண்டு மாநகர மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் மாநகர சபை இவ்விடயத்தில் மிகவும் கண்காணிப்புடன் நடந்து கொள்ளும் என்பதை மாநகர மக்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபை தெரிவித்திருந்தது.

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சி கடைகளின் விற்பனை நடைமுறைகள் குறித்து ஆராயும் நோக்கிலான திடீர் கள விஜயமொன்றினை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தார்.

இதில் டிஜிட்டல் அல்லாத சாதாரண தராசுகள் பாவித்த ஒரு சில இறைச்சி கடைக்காரர்களின் தராசுகள் மாநகர சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சட்ட விரோதமான முறையில் கடைகளும் இனம் காணப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இக்கள விஜயத்தின் போது ஒரு சில இறைச்சி கடைகளில் தீர்மானிக்கப்பட்ட விலை நிர்ணயம் மற்றும் விலைப் பட்டியலை பேணாதவர்களுக்கும் அக்கரைப்பற்று மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மாநகர சபை முதல்வரின் தலைமையில் மாநகர சபையினருக்கும்- பிரதேச மாட்டிறைச்சி விற்பனையாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானத்திற்கமைய பொதுமக்களுக்கு சரியான முறையில் இறைச்சி விநியோகம் இடம்பெறுகிறதா என்பதை கண்காணிக்கும் அடிப்படையில் இத்திடீர் விஜயம் அமைந்தது இக்கள விஜயத்தின் போது மாநகர சபை உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த செவ்வாய்க்கிழமை (09) அக்கரைப்பற்று மாநகர சபையின் விலை நிர்ணய தீர்மானத்திற்கு மாற்றமாக செயல்பட்ட இறைச்சிக்கடை முதல்வரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது.

மக்களின் வேண்டுகோளுக்கு அமைய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இறைச்சிகடைகள் தொடர்சியாக இருந்ததால் ஒரு விற்பனையாளர் 800g 10 200g என்ற முறை இருக்க வேண்டும் என்ற போதும்g சுமார் 600g இறைச்சி 400g முள்ளுடன் விற்பனை செய்ததை ஆதார பூர்வமாக நிரூபித்ததன் பின் அக்கடை இழுத்து மூடப்பட்டுள்ளது.

ஏனைய இறைச்சி விற்பனை நிலையங்களும் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்பதை மாநகர மக்களுக்கு அறியத்தருவதோடு பொதுமக்களும் உரிமையுடன் உங்களின் பணத்திற்கு ஏற்ற பொருளை கேட்டு பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என்றும், அக்கரைப்பற்று முதல்வர் மாநகர மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

பிரதேச சபைகள் என்ன செய்கிறது

அம்பாறை மாவட்ட காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், சம்மாந்துறை, நாவிதன்வெளி, பொத்துவில் போன்ற பிரதேச சபைகளிலும் இந்த மாட்டிறைச்சிக்கான நிர்ணய விலை இல்லாத பிரச்சினை தொடர்கிறது.

மாட்டிறைச்சி விலையில் மாநகர சபைகளினால் மாற்றம் கொண்டுவர முடியுமானால் அதே போன்று ஏனைய மாவட்டங்களிலுள்ள பிரதேச சபைகளினால் மாற்றங்கள் கொண்டு வந்து குறைந்த விலைகளில் மாட்டிறைச்சி விற்கப்படும் போது ஏன் அம்பாறை மாவட்ட பிரதேச சபைகளின் பிரதேசத்தில் மாத்திரம் கண்முடித்தனமாக இறைச்சி விற்பனை செய்யப்படுகின்றது ஏன் இதுவரை பிரதேச சபைகள் கவனம் கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? இனியாவது பிரதேச சபைகள் இதனை கவனம் கொள்ளுமா? எனும் கேள்விகள் பரவலாக எழ ஆரம்பித்துள்ளது.

இதனடிப்படையில் அட்டாளைச்சேனை மற்றும் இறக்காமம் பிரதேச சபைகள் பலகட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் மாட்டிறைச்சி விலையில் ஒரு நிர்ணயத்தை முன்மொழிந்துள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அறிவுறுத்தல்களை மீறி, அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்தால் கொல்களத்தை மூடுவதாக தவிசாளர் தெரிவித்துள்ளதுடன், ஒரு கிலோ மாட்டிறைச்சியை 1600 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக மாட்டிறைச்சிக் கடைக்காரர்கள் உத்தரவாதமளித்தால் மட்டுமே, மாடறுக்கும் இடம் திறந்து கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இப்படியான உடும்புப்பிடி அறிவிப்புக்களின் உறுதிப்பாடும், மாநகர சபைகளினதும் பிரதேச சபைகளினதும் முன்மொழிவுகளின் சாத்தியப்பாடுகளும் நீண்ட காலத்திற்கு நிலைக்குமா என்பதை காலமே கூற வேண்டும்.

 

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!