அம்பாறையில் கனமழை: போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்
-அம்பாறை நிருபர்-
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழையினால் தாழ் நிலங்களில் வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது.எனினும் இதுவரையில் எப்பகுதிலும் மக்கள் இடம் பெயர்வுகள் எதுவும் பதிவாகவில்லை.அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகாமையில் ஏற்பட்டுள்ள தாளமுக்க நிலையினால் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன் படி பொத்துவில் பிரதேசத்தில் இருந்து தென் கிழக்காக சுமார் 1300 கிலோ மீற்றர் தொலைவில் இது உருவாகியுள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே சகல மக்களும் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேலதிக வெள்ள நீர் வடிந்தோட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு சின்னமுகத்துவார கழிமுகம் வெட்டப்பட்டுள்ளது. எனவே ஒரு பாரிய அனர்த்தத்தை எதிர் கொள்ள அம்பாறை மாவட்ட மற்றும் கிழக்கு வாழ் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.இன்னும் மூன்று நாட்களுக்கு அதிக மழை பெய்யும் என்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளில் இளைஞர்கள் உள்ளூர் சமூக நிறுவனங்கள் அவசரமாக களத்தில் இறங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு போன்ற தாழ்நில பகுதிகளில் வெள்ள நீர் பெருக ஆரம்பித்துள்ளன.
தொடர்ச்சியாக கன மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் நாளாந்த கூலி வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் டெங்கு நோய் பெருகக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளன.
அனர்த்தங்கள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக பார்வையிடச் செல்வதை தவிர்த்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்ற நிலைமையே தொடர்கதையாகவுள்ளது.
இந்த மழை வெள்ளத்தின் காரணமாக இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை, பாண்டிருப்பு , நற்பிட்டிமுனை , சேனைக்குடியிருப்பு ,காரைதீவு , சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பகுதிகளில் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதுடன் தற்போது அங்குள்ள மக்கள் வீடுகளிற்குள் மழை வெள்ளம் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரச தனியார் நிறுவனங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளன.இதற்கு காரணம் மழை நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டும் மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.