அம்பாறையில் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில்: கரையொதுங்கியுள்ள டொல்பின் மீன்

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது.

குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண முடிந்தது.

குறித்த மீன் 4 முதல் 5 அடி வரையான நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் இது கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த மீனை காண்பதற்கு அப்பகுதி மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனை கடற்கரை பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்கு உள்ளாகி வருகின்றன.

மேலும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம் நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM