அநாதை நாய்களுக்கு வாழ்வளிக்க முயன்ற பெண்: கிராமவாசிகள் எதிர்ப்பு

-வவுனியா நிருபர்-

புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசிக்கும் பெண்மணி ஒருவர் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் அவரது காணி ஒன்றில் வீதியில் உள்ள கட்டாக்களி நாய்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை ஒன்றினைத்து சுகாதார ரீதியாக பராமிப்பதற்கென நாய்கள் காப்பகம் ஒன்றை அமைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்

இவரது குறித்த காப்பகத்தில் தற்போது 42 கட்டாக்காளி நாய்களை பரமாரித்து வருவதுடன் அதற்கான கட்டிட பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் குறித்த காப்பகத்தின் அமைவிடத்தை சுற்றிலும் மக்கள் வசிக்கும் பகுதியாக காணப்படுவதால் அயலவர்கள் இந்த காப்பகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

குறித்த நாய்கள் காப்பகத்திற்கு எதிராக இன்றைய தினம் வியாழக்கிழமை உள்ளூர் கிராமவாசிகள் சிலர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருந்த நிலையில் பொலிஸார் தலையிட்டு போராட்டத்தை தடுத்து நிறுத்தி இருந்தனர்.

காப்பகத்தை சுகாதார ரீதியாகவும் உகந்த சட்டரீதியான முறையில் அனுமதியை பெற்று நடாத்தக்கூறியும் மழை காலங்களில் காப்பகத்தினால் அயலில் துர்நாற்றம் வீசக்கூடும் எனவும் நாய்களை கழுவும் நீரினால் தமக்கு சுகாதார சீர்கேடுகள் இடம்பெறும் எனவும் அயலவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை காப்பகத்தின் உரிமையாளர் காப்பகத்தை உரிய முறைப்படி சட்டரீதியாகவும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறவும் சில கால அவகாசம் தேவை எனவும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் மேலதிகமாக நாய்களை காப்பகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் உரிய அனுமதியை பெற்று தொடர்ந்து நடாத்துமாறு அறிவுரை வழங்கியிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்