அடுத்த 3 மணி நேரத்தில் 5மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் வரும் 25ம் திகதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 23-ம் திகதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்